நான் ஒரு graphite பென்சில்கள் காலத்து அமெச்சூர் ஓவியன். "அமெச்சூர்" என்பது கூட ஓரளவு சுய தம்பட்டமாகத்தான் தெரிகிறது. தந்தை ஒரு தொழில் முறை ஓவியராக இருந்தும், (அவராலேயே) தடி கொண்டு தொழில்நுட்ப புரட்சிக்குள் விரட்டிவிடப்பட்ட ஒரு ஆடு. அழுத்தத்தில் இருந்து விடுபடவும், முக்கியமாக Facebook தற்பெருமைக்காக மட்டுமே எப்போதாவது கிறுக்குவது என் ஓவிய சாதனைகள்.
இந்த முறை கற்காலத்தை ஒதுக்கி விட்டு சமகால கருவிகளை (iPad-Pro, Apple Pencil மற்றும் Adobe-Sketch செயலி) வைத்து எடுத்த முயற்சி இது. சொந்த கற்பனை இல்லை, வழக்கம் போல ஈ அடிச்சான் copy தான். ஆனால் என்ன ஒரு மகத்தான அனுபவம்... ஒரு 12 இன்ச் சதுரத்துக்குள் இவ்வளவு வசதிகள் சாத்தியம் என்று சொன்னால் 10 வருடத்துக்கு முந்திய ஓவியர்களால் சத்தியமாக நம்ப முடியாது. http://www.adobe.com/sea/products/sketch.html கலையும், தொழில்நுட்பமும் பெரும் கலவி கொள்ளும் மெய்நிகர் புரட்சி.
என் தந்தை ஒரு பெரிய அறை முழுக்க சாதனங்கள் வைத்து இருப்பார். நின்று வரைய உதவும் முக்கோண (easel) ஸ்டாண்ட் முதல், எண்ணற்ற தூரிகைகள், மை கலக்கும் தட்டுகள், பல்வேறு தடிமன்களில் வெள்ளை அட்டைகள்... இதை எல்லாம் விட spray paint செய்ய, சொர்ணா அக்கா போல சத்தம் போடும் ஒரு பெரிய கம்ப்ரெஸ்ஸர் மோட்டார்...
அடுக்குகள் (layers) வைத்து வரைவது ஒரு நுட்பம். அதாவது மேலே உள்ள அடுக்குகளில் நாம் செய்யும் மாற்றம், கீழே உள்ள அடுக்களை பாதிக்காமல் இருப்பது. இதற்காக முதலில் அட்டைகளை வைத்து ஸ்டென்சில்கள் வெட்டுவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். முதல் நாள் குழைத்த நிறங்களின் கலவை விகிதம் அடுத்த நாள் பேப்பே என்று வராமல் அடம்பிடிக்கும். அட்டையின் தடிமன், மையின் ஈர அளவு, தூரிகையின் வயது, கைகளின் நெகிழ்வு என்று ஒரு பெரிய ரசாயன மற்றும் உயிரியல் விழிப்புணர்வு வேண்டும். மொத்தத்தில் ஒரு சாதுவுக்கு உரிய பொறுமையும், ஒரு புதிய காதலியை ஆராயும் ஆர்வமும் இல்லாத ஓவியன் தினமும் பைத்தியம் பிடித்து தான் தெளிவான்,
இது பரவாயில்லை தான். மறுமலர்ச்சி (Renaissance) காலத்து லியோனார்டோ தாவின்ச்சிக்கள் மலை ஏறி மலர்கள், மரப்பட்டைகள் சேகரித்து, கோழி வளர்த்து, அவை சேவல்களை மயக்கி முட்டை போடும் வரை காத்திருந்து, அந்த முட்டைக் கருக்களை குழைத்து முதலில் தேவையான நிறங்களை தானே தயாரிக்க வேண்டும். இது ஆரம்பம் மட்டுமே.
என்ன மாதிரி ஒரு சமூகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் !
Lets Enjoy the New Era and Soar New Heights in 2018 !
Comments
Post a Comment